Monday, May 17, 2010

புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -3

பாடம் : 31
கொள்ளைநோயின் போது பொறுமை காப்பவருக்குக் கிடைக்கும் நன்மை.
5734 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொள்ளைநோய் குறித்துக் கேட்டேன். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: அது தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்பும் வேதனையாக இருந்தது. (ஆனால், இப்போது) அதை இறைநம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் கருணையாக ஆக்கிவிட்டான். ஆகவே, (இறைவனின்) அடியார் ஒருவர் கொள்ளைநோய் பரவும் போது தமக்கு அல்லாஹ் எழுதிய விதிப்படியே அல்லாமல் எந்த நோயும் தம்மைத் தீண்டாது என உறுதி பூண்டவராகத் தம் ஊரிலேயே பொறுமையு டன் (நிலை குலையாமல்) இருப்பாராயின் அவருக்கு உயிர்த் தியாகிக்குக் கிடைக்கும் அதைப் போன்ற நன்மை (மறுமையில்) கிடைக்கும்.64
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
பாடம் : 32
(பொதுவாக) குர்ஆன், (குறிப்பாக) பாதுகாப்புக் கோரும் அத்தியாயங்களால் ஓதிப்பார்ப்பது.65
5735 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தாம் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்கûளை ஓதித் தம் மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நானே அவற்றை ஓதி அவர்கள் மீது ஊதிக் கொண்டும் அவர் களுடைய கையாலேயே (அவர்கள் மீது) தடவியபடியும் இருந்தேன். அவர்களுடைய கரத்தின் சுபிட்சம் (பரக்கத்) கருதி இவ்வாறு செய்தேன்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதுவார்கள்? என்று கேட்டேன். அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம் இரு கரங்களின் மீதும் ஊதிப் பிறகு அவற்றால் தமது முகத்தில் தடவிவந்தார்கள் என்று பதிலளித்தார்கள்.66
பாடம் : 33
அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்ப்பது.
இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித் துள்ளதாகக் கூறப்படுகிறது.67
5736 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களுடைய தோழர்களில் சிலர் (ஒரு பயணத்தின்போது) ஓர் அரபுக் குலத்தாரிடம் சென்றார்கள். அவர்களுக்கு அக்குலத்தார் விருந்தளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் அக்குலத்தாரின் தலைவனுக்குத் தேள் கொட்டிவிட்டது. அப்போது அக்குலத்தார் (நபித்தோழர்களிடம் வந்து) உங்களிடம் (இதற்கு) மருந்து ஏதும் உள்ளதா?அல்லது ஓதிப்பார்ப்பவர் எவரும் இருக்கிறாரா? என்று கேட்டனர். அதற்கு நபித்தோழர்கள், நீங்கள் எங்களுக்கு விருந்தளிக்க முன் வரவில்லை. ஆகவே, நீங்கள் எங்களுக்கு (ஒரு) குறிப்பிட்ட கூலியைத் தந்தாலே தவிர (வெறுமனே) உங்களுக்கு நாங்கள் ஓதிப் பார்க்கமாட்டோம் என்று கூறினர்.
உடனே, நபித்தோழர்களுக்காக அக் குலத்தார் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தையைக் கூலியாக நிர்ணயித்தார்கள். நபித்தோழர்களில் ஒருவர் (எழுந்து சென்று) குர்ஆனின் அன்னை' எனப்படும் அல்ஃபாத்திஹா'அத்தியாயத்தை ஓதித் தமது எச்சிலைக் கூட்டி (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். உடனே அவர் வ- நீங்கி குணமடைந்தார். (பேசியபடி) அவர்கள் ஆடுகளைக் கொண்டுவந்(து கொடுத்)தனர். நபித்தோழர்கள், நபி (ஸல்) அவர்களிடம் (அனுமதி) கேட்காத வரை இதை நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று (தமக்குள்) பேசிக் கொண்டு அவ்வாறே நபி (ஸல்) அவர்களிடம் (வந்து அனுமதி) கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் சிரித்துவிட்டு அல் ஃபாத்திஹா'அத்தியாயம் ஓதிப்பார்க்கத் தகுந்தது என்று உமக்கு எப்படித்தெரியும்? அந்த ஆடுகளை எடுத்துக்கொள்ளுங்கள்;எனக்கும் அதில் ஒரு பங்கு கொடுங்கள் என்று சொன்னார்கள்.68
பாடம் : 34
ஓதிப்பார்ப்பதற்காக ஆட்டு மந்தையை (ஊதியமாகத் தரும்படி) நிபந்தனையிடுவது.
5737 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு பயணத்தின்போது) நபித்தோழர் களில் சிலர் ஒரு நீர் நிலையைக் கடந்து சென் றார்கள். அங்கு தங்கியிருந்த மக்களிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருந்தார். அப்போது அந்த நீர் நிலையில் தங்கியிருந்தவர்களில் ஒருவர் நபித்தோழர் களிடம் வந்து, உங்களிடையே ஓதிப் பார்ப்பவர் எவரேனும் இருக்கிறாரா?இந்த நீர் நிலையில் தங்கியிருப்பவர்க(ளான எங்க)ளிடையே (தேளின்) விஷக்கடிக்கு ஆளான ஒருவர் இருக்கின்றார்என்று கூறினார். உடனே நபித்தோழர்களில் ஒருவர் சென்று குர்ஆனின் அல்ஃபாத்திஹா' அத்தியாயத்தைச் சில ஆடுகளை கூலியாகத் தரவேண்டுமென்ற நிபந்தனையின் பேரில் ஓதினார். உடனே விஷக்கடிக்கு ஆளானவர் குணமடைந்தார். ஓதிப்பார்த்தவர் அந்த ஆடுகளைத் தம் நண்பர்களிடம் கொண்டு வந்தார். அவர்கள் அதை (ஓதிப்பார்த்த தற்காகக் கூலி பெற்றதை) வெறுத்தார்கள். மேலும், அல்லாஹ்வின் வேதத்திற்கா நீர் கூலி வாங்கினீர்? என்று கேட்டார்கள். இறுதியில் மதீனா சென்று, அல்லாஹ்வின் தூதரே! இவர் அல்லாஹ்வின் வேதத்தை ஓதியதற்குக் கூலி வாங்கிக் கொண்டார் என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் ஊதியம் பெற்றிட மிகவும் தகுதி வாய்ந்தது அல்லாஹ் வின் வேதமேயாகும் என்று சொன்னார்கள்.69
பாடம் : 35
கண்ணேறுக்கு ஓதிப்பார்ப்பது70
5738 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்ணேறுவி(ன் தீயவிளைவி)லிருந்து விடுபட ஓதிப்பர்த்துக்கொள்ளும்படி கட்டளையிட் டார்கள்' அல்லது எனக்குக் கட்டளையிட் டார்கள்.'
5739 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஒரு சிறுமியைப் பார்த்தார்கள். அவளுடைய முகத்தில் கருஞ்சிவப்பான படர்தாமரை ஒன்று இருந்தது. நபி (ஸல்) அவர்கள், இவளுக்கு ஓதிப்பாருங்கள். ஏனெனில், இவள் மீது கண்ணேறு பட்டிருக்கிறதுஎன்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸுபைதி (ரஹ்) அவர்களிடமிருந்தும் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இதே ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம் : 36
கண்ணேறு உண்மையே
5740 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், கண்ணேறு (ஏற்படுவது) உண்மையே என்று சொன்னார்கள். மேலும், பச்சைகுத்துவதைத் தடை செய்தார்கள்.71
பாடம் : 37
பாம்புக் கடி மற்றும் தேள் கடிக்கு ஓதிப் பார்ப்பது.
5741 அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்களிடம், விஷக் கடிக்கு ஓதிப்பார்ப்பது குறித்துக் கேட்டேன். அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ஓவ்வொரு விஷ உயிரினத்தின் கடியிலிருந்தும் (நிவாரணம் பெற்றிட) ஓதிப்பார்ப்பதற்கு அனுமதியளித்தார்கள் என்று சொன்னார்கள்.
பாடம் : 38
நபி (ஸல்) அவர்கள் ஓதிப்பார்த்தது
5742 அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நானும் ஸாபித் பின் அஸ்லம் அல்புனானீ (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் சென்றோம். ஸாபித் (ரஹ்) அவர்கள் அபூஹம்ஸாவே! நான் நோய் வாய்ப்பட்டுள்ளேன் என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதனால் ஓதிப்பார்த்தார்களோ அதனால் உங்களுக்கும் நான் ஓதிப் பார்க்கட்டுமா? என்று கேட்டார்கள். ஸாபித் (ரஹ்), சரி (அவ்வாறே ஓதிப்பாருங்கள்) என்று சொல்ல, அனஸ் (ரலி) அவர்கள், அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! முத்ஹிபல் பஃஸி, இஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபீ, லா ஷாஃபிய இல்லா அன்த்த,ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன்' என்று கூறி ஓதிப் பார்த்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குபவனே! குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன்னைத் தவிர குணமளிப்பவர் வேறு எவருமில்லை. அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக.)
5743 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியார் ஒருவருக்காக (நோயிலிருந்து) பாதுகாப்புக் கோரிவந்தார்கள். தமது வலக் கரத்தால் (வ-யுண்டான இடத்தைப் பரிவுடன்) வருடிக் கொடுத்து, அல்லாஹும்ம ரப்பன்னாஸ்! அத்ஹிபில் பஃஸ்,வஷ்ஃபிஹி. வ அன்த்தஷ் ஷாஃபி. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக. ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் என்று பிரார்த்தித்தார்கள். (பொருள்: இறைவா! மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்கி இவருக்குக் குணம ளித்திடுவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரண மில்லை. நோய் அறவே இல்லாதவாறு குணமளிப்பாயாக!)
இதைப் போன்றே ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
5744 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இம்ஸஹில் பஃஸ். ரப்பன்னாஸ்! பியதிகஷ் ஷிஃபாஉ. லா காஷிஃப லஹு இல்லா அன்த்த என்று கூறி ஓதிப்பார்த்து வந்தார்கள். (பொருள்: மக்களை இரட்சிப்ப வனே! துன்பத்தைத் துடைப்பாயாக! நிவாரணம் உன் கரத்தில்தான் உள்ளது. உன்னைத் தவிர துன்பத்தை நீக்குபவர் வேறு எவரும் இல்லை.)
5745 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் நோயாளிக்காக, பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா பிரீகத்தி பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் பெயரால்... எங்களில் சிலரது உமிழ் நீரோடு எமது இந்த பூமியின் மண் (இணைந்தால் அது) எங்கள் இறைவனின் ஆணையின்பேரில் எங்களில் நோயுற்று இருப்பவரைக் குணப்படுத்தும்.)72
5746 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதிப்பார்க்கும் போது பிஸ்மில்லாஹி. துர்பத்து அர்ளினா வரீகத்து பஅளினா யுஷ்ஃபா சகீமுனா பிஇத்னி ரப்பினா என்று கூறுவார்கள். (பொருள்: அல்லாஹ்வின் திருப் பெயரால்... எங்கள் பூமியின் மண்ணும் எங்களில் சிலரது உமிழ் நீரும் (கலந்தால்) எங்கள் இறைவனின் ஆணையின் பேரில் எங்களில் உள்ள நோயாளியைக் குணப்படுத்தும்.)
பாடம் : 39
ஓதிப்பார்க்கும் போது வாயால் ஊதுவது
5747 அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தானிடமி ருந்து வருவதாகும். ஆகவே,நீங்கள் வெறுக்கின்ற ஒரு விஷயத்தைக் (கனவில்) கண்டால் கண் விழிக்கும் போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூகத்தாதா (ரலி) அவர்கள் சொல்ல நான் செவியுற்றேன். இந்த ஹதீஸை நான் கேட்(டு அறிந்துவிட்)ட காரணத்தால் மலையைவிடச் சுமையான ஒரு கனவை நான் கண்டாலும் கூட அதைப் பொருட்படுத்துவதில்லை.
5748 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்குச் சென்றால் குல் ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய பாதுகாப்புக் கோரும் (112, 113, 114) அத்தியாயங்கள் மூன்றையும் ஓதித் தம் உள்ளங்கைகளில் ஊதி அவற்றால் தமது முகத்தையும், தம் இரு கரங்கள் உடலில் எங்கெல்லாம் படுமோ அந்த இடங்களையும் தடவிக்கொள்வார்கள். அவர்கள் நோயுற்ற போது நான் அவர்களுக்கு அதைச் செய்து விடும்படி என்னைப் பணிப்பார்கள்.73
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யூனுஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தமது படுக்கைக்குச் செல்லும் போது இவ்வாறு செய்வதை நான் பார்த்து வந்தேன்.
5749 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய தோழர்களில் ஒரு குழுவினர் பயணமொன்றை மேற் கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) அரபுக் குலங்களில் ஒரு குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு) அருகில் தங்கினார்கள். நபித் தோழர்கள் அக்குலத்தாரிடம் தமக்கு விருந்தளிக்கும்படி கேட்க அவர்களுக்கு அக் குலத்தார் விருந்தளிக்க மறுத்துவிட்டார்கள். பின்னர், அந்தக் குலத்தாரின் தலைவனைத் தேள் கொட்டிவிட்டது. ஆகவே,அவனுக்காக அ(க் குலத்த)வர்கள் எலலா முயற்சிகளையும் செய்துபார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், இதோ! இங்கே நமக்கருகில் தங்கியிருக்கும் கூட்டத்தாரிடம் நீங்கள் சென்றால் அவர்களிடம் (இதற்கு) ஏதேனும் (மருந்து) இருக்கலாம்! என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித்தோழர்களிடம் வந்து, கூட்டத்தாரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது! அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்;எதுவுமே அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டனர்.
அப்போது நபித்தோழர்களில் ஒருவர், ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஓதிப்பார்க்கிறேன்; என்றாலும்,அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து அளிக்காததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது! என்றார். அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஒரு ஆட்டு மந்தையை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். அந்த நபித்தோழர், தேளால் கொட்டப்பட்டவர் மீது அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்...' என்று ஓதி (இலேசாக) உமிழ்ந்தார். உடனே பாதிக்கப் பட்டவர் கட்டுகளிலிருந்து அவிழ்த்துவிடப் பட்டவர் போல் நடக்க ஆரம்பித்தார். எந்த வேதனையும் அவரிடம் தென்படவில்லை. பிறகு அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். இதைப் பங்குவையுங்கள்! என்று (நபித் தோழர்) ஒருவர் கூறிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது! என்று ஓதிப்பார்த்தவர் கூறினார். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டு விட்டு, நீங்கள் செய்தது சரிதான்;அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்! என்று கூறினார்கள்.74
பாடம் : 40
ஓதிப்பார்ப்பவர் தமது வலக் கரத்தால் வ-யுள்ள இடத்தைத் தடவுதல்.
5750 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஒருவருக்காகப் பாதுகாப்புக் கோரித் தமது வலக் கையால் அவரை தடவிக்கொடுத்து, அத்ஹிபில் பஃஸ். ரப்பன்னாஸ்! வஷ்ஃபி அன்த்தஷ் ஷாஃபி. லா ஷிஃபாஅ இல்லா ஷிஃபாஉக -ஷிஃபாஅன் லா யுஃகாதிரு சகமன் என்று கூறுவார்கள். (பொருள்: மக்களை இரட்சிப்பவனே! துன்பத்தைப் போக்குவாயாக! குணப்படுத்துவாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை. நோய் சிறிதும் இல்லாதவாறு குணப்படுத்திடுவாயாக.)75
இதைப் போன்றே ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடம் : 41
ஆணுக்குப் பெண் ஓதிப்பார்ப்பது
5751 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது (குர்ஆனில் உள்ள) பாதுகாப்புக் கோரும் (இறுதி மூன்று) அத்தியாயங்களை ஓதித் தம் (உடல்) மீதே ஊதிக்கொள்வார்கள். அவர்களுக்கு நோய் கடுமையான போது நான் அவற்றை ஓதி அவர்கள் மீது ஊதிக் கொண்டும் அவர்களுடைய கையின் சுபிட்சம் (பரக்கத்) கருதி அதைக் கொண்டே (அவர் களின் மேனியை) தடவிக் கொடுத்துக் கொண்டும் இருந்தேன்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மஅமர் பின் ராஷித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எப்படி (ஓதி) ஊதிவந்தார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தம் இரு கைகளின் மீதும் ஊதிப் பிறகு அவ்விரண்டினாலும் தமது முகத்தின் மீது தடவிக்கொள்வார்கள் என்று பதிலளித்தார்கள்.76
பாடம் : 42
ஓதிப்பார்க்காமலிருப்பவர்77
5752 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் எங்களிடம் வந்து (பின்வருமாறு) கூறினார்கள்: (விண்ணுலகப் பயணத்தின்போது) பல சமுதாயத்தார் எனக்கு எடுத்துக் காட்டப் பட்டனர். அப்போது தம்முடன் ஒரேயொரு மனிதர் மட்டுமிருந்த இறைத்தூதரும், இரண்டு மனிதர்கள் மட்டுமே தம்முடனிருந்த இறைத்தூதரும், (பத்துப் பேர்களுக்குட்பட்ட) ஒரு சிறுகூட்டம் மட்டுமே தம்முடன் இருந்த இறைத்தூதரும், தம்முடன் ஒருவருமில்லாத இறைத்தூதரும் கடந்து செல்லத் தொடங்கி னர். அடிவானத்தை அடைத்திருந்த ஒரு பெரும் கூட்டத்தை நான் கண்டேன். அது என் சமுதாயமாக இருக்கும் என எதிர் பார்த்தேன். அப்போது, இது (இறைத்தூதர்) மூசாவும் அவருடைய சமுதாயமும் என்று எனக்குச் சொல்லப்பட்டது. பிறகு என்னிடம், பாருங்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது அடிவானத்தை அடைத்திருந்த (ஒரு பெரும்) மக்கள் திரளை நான் பார்த்தேன். மீண்டும் என்னிடம், இங்கும் இங்கும் பாருங்கள் என்று சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானத்தை அடைத்தி ருந்த ஏராளமான மக்கள் திரளைக்
கண்டேன். அப்போது, இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர் என்று சொல்லப்பட்டது.
(விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் விளக்கிக் கூறாத நிலை யிலேயே மக்கள் கலைந்து சென்றுவிட்டனர். பின்னர் நபித்தோழர்கள் (சிலர் மட்டும் இது தொடர்பாகத்) தமக்கிடையே விவாதித்துக் கொண்டார்கள். சிலர் நாமோ இறைவனுக்கு இணை கற்பிக்கும் கொள்கையில் (நம் குடுபங்கள்) இருந்த நிலையில் பிறந்தோம். ஆயினும், பின்னர் நாம் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டோம். எனவே, (இஸ்லாத்தில் பிறந்த) நம் பிள்ளைகளே அந்த எழுபதாயிரம் பேர் ஆவர் என்று சொன்னார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், (விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக்கொள்ள மாட் டார்கள்; ஓதிப்பார்க்க மாட்டார்கள்; தம் இறைவனையே சார்ந்திருப்பார்கள் என்று சொன்னார்கள். அப்போது உக்காஷா பின் மிஹ்ஸன் (ரலி) அவர்கள் எழுந்து, அவர் களில் நானும் ஒருவனா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். வேறொருவர் எழுந்து நின்று, அவர்களில் நானும் ஒருவனா?என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், இவ்விஷயத்தில் உக்காஷா உங்களை முந்திக் கொண்டுவிட்டார் என்று சொன்னார்கள்.78
பாடம் : 43
பறவை சகுனம் பார்ப்பது (கூடாது).79
5753 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனமும் கிடையாது. அப சகுனம் (இருக்க வேண்டுமென்றால்) மனைவி, வீடு,வாகனம் ஆகிய மூன்றில்தான் இருக்கும்.80
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
5754 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்என்று சொன்னார்கள். மக்கள், நற்குறி என்பதென்ன? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அது நீங்கள் செவியுறும் நல்ல (மங்கலகரமான) சொல்லாகும் என்று பதிலளித்தார்கள்.81
பாடம் : 44
நற்குறி82
5755 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும் என்று சொன்னார்கள். மக்கள், நற்குறி என்பது என்ன அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள் அதற்கு அவர்கள், நீங்கள் செவியுறுகின்ற நல்ல (மங்கலகரமான) சொல்தான் என்று பதிலளித்தார்கள்.
5756 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்றுநோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. நற்குறி எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கும். நல்ல (மங்கலகரமான) சொல்தான் அது.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.
பாடம் : 45
ஆந்தை சகுனம் கிடையாது.83
5757 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்று நோய் கிடையாது. பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.84

No comments:

Post a Comment