ஸுனன் அபூதாவூத்
(நபி மொழித் தொகுப்பு)
அத்தியாயம் 1
சுத்தம் செய்தல்
பாடம் 1:
மலம், ஜலம் கழிக்க மறைவான இடத்திற்கு செல்வது.
ஹதீஸ் : 1
நபிகள் நாயகம்(ஸல்) மலம், ஜலம் கழிக்க செல்லும் போது துôரமாக சென்று விடுவார்கள் என்று முகீரா பின் ஷுஃபா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் தாரிமீ, நஸயீ, இப்னு மாஜா திர்மிதீ ஆகியோரும் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளனர். இமாம் திர்மிதீ (ரஹ்) சரியான அழகான ஹதீஸ் என்று கூறுகின்றார்கள்.)
ஹதீஸ் எண் : 2
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மலம், ஜலம் கழிக்க (செல்ல) விரும்பினால் தன்னை யாரும் பார்க்காதவாறு தொலை விற்கு சென்றிடுவார்கள் என்று ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : இதன் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறும் கூபா நாட்டைச் சார்ந்த இஸ்மாயீல் பின் அப்துல்மலிக் என்பவர் மக்காவில் வசிப்பவர் ஆவார். இவரை பலர் குறை கண்டுள்ளனர். இந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும் பதிவு செய்து உள்ளார்கள்.)
பாடம் 2 :
சிறுநீர் கழிக்க ஏற்றவாறு இடத்தை அமைத்தல் :
ஹதீஸ் எண் : 3
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் பஸரா நகருக்கு வந்த போது அவர்களிடம், அபூமூஸா அவர்(கள் அறிவிக்கின்ற ஹதீஸ்)களைப் பற்றி தெரிவிக்கப்பட்டது. உடனே அப்துல் லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், அபூமூஸா (ரலி) அவர்களிடம் சில விசயங்களை கேட்டு கடிதம் எழுதினார். அவர்களுக்கு அபூமூஸா (ரலி) அவர்கள் (பின் வருமாறு பதில்) எழுதினார்கள் : நான் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனிருந்தேன், அப்போது அவர்கள் சிறுநீர் கழிக்க எண்ணி, ஒரு சுவருக்கு அடியில் உள்ள மிருதுவான இடத்திற்குச் சென்று சிறுநீர் கழித்தார்கள். பின்பு, உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்க விரும்பினால், சிறுநீர் கழிப்பதற்காக தக்க இடத்தை தேடி (தெளிவு செய்து) கொள்வாராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று தமக்கு ஒரு பெரியவர் அறிவித்ததாக அபுதய்யாஹ் என்பார் அறிவிக்கின்றார்.
(குறிப்பு : இதில் அறியப்படாத ஒருவர் இடம் பெற்றுள்ளார்.)
பாடம் : 3
கழிவறையில் நுழையும் போது சொல்ல வேண்டியவை
ஹதீஸ் எண் : 4
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்கு செல்லும் போது அல்லாஹும்ம இன்னீ அவூது பிகமினல் குபுஸிவல் கபாயிஸி என்று சொல்பவர்களாக இருந்தனர்.
மற்றொரு அறிவிப்பில் அவூது பில்லாஹி மினல்குபுஸிவல் கபாயிஸி என்று சொல்பவர்களாக இருந்தனர்.
மற்றொரு அறிவிப்பில் அவூது பில்லாஹி மினல்குபுஸிவல் கபாயிஸி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பில் மூன்றாவது அறிவிப்பாளராக (ஹம்மாதுக்கு பதிலாக) அப்துல் வாரிஸ் என்பார் இடம் பெறுகின்றார்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 5
மேற்கண்ட இரண்டு விதமான சொற்களும் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 6
(மனிதர்கள் மலம், ஜலம் கழிக்க ஒதுக்கின்ற) இந்த பேரீத்தமரங்கள் அடர்ந்த காடுகள் (ஜின், ஷைத்தான்கள் அடிக்கடி) வந்து போகும் பகுதிகளாகும். எனவே, உங்களில் ஒருவர் (அப்படிப்பட்ட) கழிப்பிடத்திற்கு வரும்போது, அவர் அவூது பில்லாஹி பினல் குபுஸி வல்கபாயிஸி என்று கூறுவாராக! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸை இப்னுமாஜா அவர்களும், நஸயீ அவர்கள் தனது ஸுனன் அல்குப்ராவிலும் பதிவு செய்துள்ளார்கள்.
(குறிப்பு : அல்லாஹ்விடம் நான், ஆண், பெண், ஷைத்தான்களின் (தீங்குகளை) விட்டும் காவல் தேடுகிறேன் என்பதே 4, 5, 6 ஹதீஸ்களின் அரபி வாசகங்களின் கருத்தாகும்.
பாடம் 4 :
மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்குதல் கூடாது
ஹதீஸ் : 7
உங்களுக்கு மலம், ஜலம் கழிக்கும் ஒழுக்கமுறை உட்பட (ஒழுக்க பண்புகள்) அனைத்தையும் உங்களுடைய நபி அவர்கள் கற்றுத் தந்தார்களா? என்று (ஸல்மான்) அவர்களிடம் வினவப் பட்டபோது, அவர் (பின்வருமாறு) பதில் அளித்தார். ஆம் ! நாங்கள் மலம் அல்லது சிறுநீர் கழிக்கும்போது. கிப்லாவை முன்னோக்குவதையும், வலது கையால் துப்புரவு செய்வதையும், எங்களில் யாரும் மூன்று கற்களுக்கு குறைவாக (எடுத்து சென்று துடைத்து) சுத்தம் செய்வதையும், விட்டை அல்லது எலும்புத் துண்டைக் கொண்டு சுத்தம் செய்வதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், நஸயீ, திர்மிதீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண் : 8
உங்களிடத்தில் (மார்க்க நெறிகளை) உங்களுக்கு கற்றுத் தருகின்ற தந்தையின் தரத்தில் உள்ளவன் தான் நான் ! எனவே உங்களில் ஒருவர் மலம் (ஜலம்) கழிக்க சென்றால் அவர் கிப்லாவை முன்னோக் கவோ அல்லது பின்னோக்கவோ, மேலும் (அப்போது) தன் வலது கரத்தினால் துப்புரவு செய்யவோ வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு (துடைத்து சுத்தம் செய்யும் போது) மூன்று கற்களுக்குக் குறைவாக (பயன்படுத்துவதை) தடை செய்தனர். எனவே நாங்கள் கிப்லாவை விட்டும் வேறு திசையில் திரும்பி (அந்தக் கட்டிடத்தில் நுழையநேர்ந்ததற்காக) அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடிக்கொள்வோம் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றனர்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் திர்மிதீயிலும் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 9
நீங்கள் மலம் (அல்லது சிறுநீர்) கழிக்கச் சென்றால் மலம், ஜலம் கழிக்கும்போது கிப்லாவை முன்னோக்க வேண்டாம் எனினும், நீங்கள் கிழக்கோ மேற்கோ நோக்கிக் கொள்ளுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் சிரியாவிற்கு வந்தபோது அங்குள்ள கழிப்பு அறைகள் கிப்லாவை நோக்கி கட்டியிருப்பதைக் கண்டோம். கிப்லாவை விட்டும் (வேறு திசையில்) திருப்பிக் கொண்டோம். (குறிப்பு : இது மக்கா வாசிகளை கருத்தில் கொண்டு சொல்லப்பட்டதாகும். இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 10
சிறுநீர் அல்லது மலம் கழிக்கும் போது நாங்கள் பைத்துல் மக்தஸ், கஃபா என்ற இரு கிப்லாக்களை முன்னோக்குவதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர்.
ஹதீஸ் எண் 11
இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது ஒட்டகத்தை கிப்லாவை நோக்கிப் படுக்கவைத்து, பிறகு அதை நோக்கி சிறுநீர் கழிக்க அமரக் கண்ட நான் அவர்களிடம் அபூஅப்துர் ரஹ்மானே! இது தடை செய்யப்பட்டதல்லவா? என்று வினவினேன். அதற்கு அவர்கள் இது வெட்ட வெளிப்பகுதியில்தான் தடை செய்யப்பட்டுள்ளது. உன்னை மறைக்கும் பொருள் உனக்கும் கிப்லாவுக்கும் இடையில் இருந்தால் (அது) தவறல்ல என்று பதில் அறித்தார்கள்.
பாடம் 5 :
கிப்லாவை முன்னோக்க அனுமதி
ஹதீஸ் எண் : 12
நான் வீட்டின் முகட்டில் ஏறி நின்றேன். அப்போதுதான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பைத்துல் மக்தஸை முன்னோக்கியவர்களாக தனது தேவையை நிறைவு செய்வதற்காக இரு செங்கற்கள் மீது அமர்ந்திருக்கக் கண்டேன் என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு :- இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 13
நபி (ஸல்) அவர்கள் நாங்கள் கிப்லாவை முன்னோக்கி சிறுநீர் கழிக்க தடை விதித்திருந்தனர். ஆனால் அவர்கள் உயிர் கைப்பற்றப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்பு கிப்லாவை முன்னோக்(கி சிறுநீர் கழிக்)கக் கண்டிருக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மத், திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
பாடம்: 6
மலம் ஜலம் கழிக்கும் போது ஆடையை நீக்கலாமா?
ஹதீஸ் எண் : 14
நபி (ஸல்) அவர்கள் தன் தேவையை நிறைவேற்ற விரும்பினால் தரையை (அண்மித்து) அமர்கின்றவரை தனது ஆடையை உயர்த்த மாட்டார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
இமாம் அபூதாவூத் குறிப்பிடுகின்றார் கள், மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் அப்துஸ்ஸலாம் பின் ஹர்ப் அவர்கள் அனஸ் பின் மாலிக் மூலம் அஃமஷ் வழியாக அறிவிக்கின்றார். (இது பலவீனமானதாகும்)
(குறிப்பு : இமாம் ஸுயூத்தி அவர்கள் தெரிவிக்கின்றார்கள் இது (அப்துஸ்ஸலாம்) பலவீனமானது என்று இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிட்டிருப்பது அப்துஸ்ஸலாம் அவர்களை பலவீனமானவர் என்பதை தெரிவிப்பதற்காக அல்ல. ஏனெனில், இவர் சஹீஹைன் (புகாரி, முஸ்லிம் ஆகியவைகளின்) அறிவிப்பாளர்களின் வரிசையில் இடம் பெறும் நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர் ஆவார். எனினும், அனஸ் (ரலி:) அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது அறிவிப்பாளரைபலவீனமானவர் என்று தெரிவிப்பதே இமாம் அவர்களின் நோக்கமாகும். ஏனெனில் அஃமஷ் அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செயியுறவில்லை. இதனால் இவர் (இதை) முர்ஸலாக அறிவிக்கின்றார். இப்னு உமர் அவர்கள் வழியாக அறிவிக்கும் அந்த ஒருவர் யாரென தெரியாததால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.) அதாவது அனஸ் பின் மாலிக், இப்னு உமர் இருவர் வழியாக அறிவிக்கும் இரண்டுமே பலவீனமானதாகும்.
பாடம் :- 7
கழிப்பிடத்தில் உரையாடலாகாது
ஹதீஸ் எண் : 15
(மலஜலம் கழிக்கும் போது) தங்கள் மர்மஸ்தானங்களை வெளிப்படுத்தி உரையாடிக் கொண்டு மலம் (ஜலம்) கழிக்க இருவர் (இணைந்து) செல்லக் கூடாது. காரணம் இதனை அல்லாஹ் வெறுக்கின்றான், என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற செவியுற்றேன் என்று அபூஸயீத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் அவூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இதை இக்ரிமாவை தவிர வேறுயாரும் அறிவிக்கவில்லை.
(குறிப்பு :- இந்த இக்ரிமா பின் அம்மார் என்பவர் யஹ்யா பின் அபூகஸீர் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை புகாரி, அஹ்மது, நஸயீ ஆகியோர் குறை கூறியுள்ளார்கள். இந்த ஹதீஸில் யஹ்யா பின் அபூகஸிர் வாயிலாகவே இக்ரிமா அறிவிப்பதால் இது பலவீனமானதாகும்.)
பாடம் 8 :-
சிறுநீர் கழிக்கும் போது ஸலாமுக்கு பதில் உரைத்தல்
ஹதீஸ் எண் : 16
நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும் போது அவர்களைக் கடந்து சென்ற ஒருவர் அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் (ஸலாம்) கூறவில்லை என்று இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :- நபி (ஸல்) அவர்கள் தயம்மும் செய்து பிறகு அம்மனிதருக்கு பதில் ஸலாம் கூறினார்கள் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் வழியாகவும் மற்றவர் களிடமிருந்தும் அறிவிக்கப்படுகின்றது.
(குறிப்பு : முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மத், இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 17
முஹாஜிர் பின் குன்புத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருக்கும்போது வந்து அவர்களுக்கு ஸலாம் உரைத்தார். அவருக்கு அவர்கள் உலூச் செய்கின்ற வரை பதில் கூறவில்லை. பின்பு அவரிடம் அவர்கள் சுத்தமில்லாமல் அல்லாஹ்வை நினைவு கூறுவதை வெறுக்கின்றேன் என்று காரணம் சொன்னார்கள் என்று முஹாஜிர் பின் குன்ஃபுத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : இது நஸயீலும் இடம் பெற்றுள்ளது)
பாடம் 9 :
தூய்மையின்றி அல்லாஹ்வை கூறுதல்
ஹதீஸ் எண் : 18
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது எல்லா நேரங்களிலும் அல்லாஹ் வை நினைவு கூறுபவர்களாக இருந்தனர் என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(குறிப்பு : இதை முஸ்லிம், திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத் ஆகியோரும் தனது நூல்களில் பதிவாக்கியுள்ளனர்.)
பாடம் :- 10
இறைப்பெயர் பொறிக்கப் பட்ட மோதிரத்தோடு கழிப்பறைக்குச் செல்லுதல்
ஹதீஸ் எண் : 19
நபி (ஸல்) அவர்கள் கழிப்பறைக்குச் செல்லும் போது தனது மோதிரத்தை (கழற்றி) வைத்து விடுவார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இமாம் இபூதாவூத் குறிப்பிடுகின்றார் கள்: இது முன்கரான (நிராகரிக்கப் பட்ட) ஹதீஸ் ஆகும். அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். பின்பு அதை (கழற்றி) எறிந்து விட்டார்கள் என்று தான் அனஸ் (ரலி) ஜுஹ்ரி, சியாத் பின் சஃது வழியாக இப்னு ஜுரைஜ் அவர்களிடமிருந்து அறியப்படுகிறது. இதில் சந்தேகத்திற் குரியவர் ஹம்மாம் ஆவார். இந்த ஹதீஸை ஹம்மாமைத் தவிர வேறுயாரும் அறிவிக்கவில்லை.
(குறிப்பு : திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது)
பாடம் 11 :
சிறுநீரை துப்புரவு செய்தல்
ஹதீஸ் எண் : 20
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு கப்ருகளுக்கருகில் நடந்து செல்லும் போது (பின்வருமாறு) கூறினார்கள். (இந்த கப்ரில் உள்ள) இருவரும் வேதனை செய்யப் படுகிறார்கள். ஆனால் இவர்கள் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்பட வில்லை. (இரு கப்ருகளை சுட்டிக் காட்டி, இந்த கப்ரில் உள்ள) இவர், சிறுநீரிலிருந்து தன்னை துப்புரவாக்கிக் கொள்ளவில்லை. (இந்த கப்ரில் உள்ள) இவரோ கோள் சொல்லிக் கொண்டலைந்தார் என்று சொல்லி விட்டு அவர்கள் ஒரு பசுமையான பேரீத்த மட்டை யைக் கொண்டு வரச்செய்து, அதை இரண்டாகப் பிளந்து, இதிலொன்றும் அதிலொன்றும் நட்டினார் கள். பிறகு இவ்விரண்டும் காயாதவரை இவ்விருவருக்கும் வேதனை எளிதாக்கப் படலாம் என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் எண் : 21
மேலுள்ள ஹதீஸின் பொருளை நபி (ஸல்) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ், முஜாஹித், மன்சூர், ஜரீர் வழியாக உஸ்மான் பின் அபீஷைபா அறிவிக்கின்றபோது (சிறு நீரிலிருந்து தன்னை துப்புரவாக்கிக் கொள்ளவில்லை என்பதற்கு பதிலக) சிறுநீர் கழிக்கும் போது தான் (பிறர் பார்வை யிலிருந்து) மறைந்து கொள்ளவில்லை என்று அறிவிக்கின்றார்.
ஹதீஸ் எண் : 22
நானும், அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் தோல் கேடயத்தோடு வெளிவந்து, பின்பு அதை மறைப்பாக்கிக் கொண்டு சிறுநீர் கழித்தார்கள். அவர்களைப் பாருங்களேன்! ஒரு பெண் சிறுநீர் கழிப்பது போன்று (மறைந்து கொண்டு) சிறுநீர் கழிக்கின்றார் கள் ! என்று நாங்கள் பேசிக் கொண்டோம். இதை செவியுற்ற அவர்கள், பனூ இஸ்ராயீலைச் சார்ந்த ஒருவர் அடைந்த (அவல) நிலையை நீங்கள் அறியவில்லையா? பனூ இஸ்ராயீலர் தங்கள் மீது சிறுநீர் பட்ட பகுதியை வெட்டிக் கொள்வார்கள் ! அவர்களில் ஒருவர் அவ்வாறு செய்ய வேண்டாம் என்று) அவர்களை தடுத்தார். எனவே அவர் அவரது கப்ரில் வேதனை செய்யப்படுகிறார்.
இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:-
அபூமூஸா வாயிலாக அபூவாயில் மூலம் மன்சூர் அறிவிக்கும் போது இந்த ஹதீஸில் (தங்கள் மீது சிறுநீர் பட்டு விட்ட பகுதியை வெட்டிக் கொள்வார்கள் என்ற வாசகத்திற்கு பதிலாக தங்கள் தோலை வெட்டி விடுவார்கள் என்றும், அபூமூஸா வாயிலாக அபூவாயில் மூலம் ஆஸிம் அறிவிக்கும் போது தங்களின் உடம்பில் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : ஹாபிள் இப்னு ஹஜர் அவர்கள் தனது பத்ஹுல் பாரியில் அவர்களில் ஒருவரின் தோலில் என்றே முஸ்லிமில் உள்ள ஹதீஸில் இடம் பெறுகிறது. இந்த இடத்தில் தோல் என்பதன் கருத்து அவர்கள் அணியக்கூடிய தோல் (ஆடைகள்) ஆகும் என்று குர்துபி தெரிவிக்கின்றார். புகாரியில் இடம் பெறும் ஹதீஸில் ஆடைகள் என்று தெளிவாக இடம் பெறுகிறது)
பாடம் : 12
நின்று சிறுநீர் கழிக்கலாமா?
ஹதீஸ் எண் : 23
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டுக்கு வந்து நின்று கொண்டு சிறுநீர் கழித்தார்கள். பிறகு தண்ணீர் கொண்டு வரச்செய்து தனது இருகால் உறைகளிலும் தடவிக் கொண்டார்கள் என்று ஹுதைபா(ரலி) அறிவிக்கின்றார்கள். (அவர்கள் சிறுநீர் கழிக் கும்போது) சற்று விலகி நான் தூரசென்ற போது என்னை அவர்கள் அழைத்தார்கள் உடனே நான் அவர்களது குதிகால்களுக்கு பின்னால் வந்து விட்டேன் என்றும் ஹுதைபா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா ஆகியோரும் தமது நூல்களில் பதிவாக்கியுள்ளனர்)
பாடம் : 13
பாத்திரத்தில் சிறுநீர் கழித்து அதை அருகில் வைத்துக் கொள்வது
ஹதீஸ் எண் : 24
நபி (ஸல்) அவர்களின் கட்டிலுக்கு அடியில் மரப்பாத்திரம் (வைக்கப் பட்டு) இருக்கும் அதில் இரவில் அவர்கள் சிறுநீர் கழிப்பார்கள் என்று உமைமாபின்து ருகையா(ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் நஸயீ, ஹாகிம், இப்னுஹிப்பான் ஆகியோரும் தமது நூல்களில் பதிவு செய்துள்ளார்கள்.)
பாடம் 14 :
சிறுநீர் கழிக்க தடைச் செய்யப் பட்ட இடங்கள்
ஹதீஸ் எண் : 25
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சாபத்திற்குரிய இரண்டை தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். அப்போது தோழர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சாபத்திற்குரிய அவ்விரண்டும் யாவை? என்று வினவியதும், மக்கள் ( நடக்கும்) பாதையில் அல்லது அவர்கள் நிழல் பெறும் இடங்களில் ஒருவர் மலம், ஜலம் கழிப்பதாகும் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : ???
இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள இதர நூல்கள் : முஸ்லிம், அஹ்மத்
ஹதீஸ் எண் : 26
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சாபத்திற்குரிய மூன்று காரியங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவை : நீர்த் துறைகள், நடைபாதை, நிழல் தரும் இடங்கள் ஆகியவற்றில் மல, ஜலம் கழிப்பதாகும்.
அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)
(குறிப்பு : இந்த ஹதீஸை இமாம் இப்னுமாஜா அவர்களும் தனது நூலிலும் பதிவு செய்துள்ளார்கள். முஆத் பின் ஜபல்(ரலி) வழியாக அறிவிக்கும் அபூஸயீத் அல்ஹிம்யரீ என்பார் முஆத் அவர்களிடம் எதையும் செவியுற்றதில்லை என்று இப்னுல் கத்தான் கூறுவதாக ஹாபிள் இப்னு ஹஜர் குறிப்பிடுகிறார்கள். எனவே இது முர்ஸல் எனும் வகையைச் சேர்ந்ததாகும்.)
பாடம் 15 :
குளியலறையில் சிறுநீர் கழித்தல்
ஹதீஸ் எண் : 27
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் தான் குளிக்கும் இடத்தில் சிறுநீர் கழிக்கவும் பிறகு அதில் குளிக்கவும் வேண்டாம். பிறகு அதில் உலூ செய்யவும் வேண்டாம். ஏனெனில் அதில் தான் பெருமளவு மனக் குழப்பம் உள்ளது.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகப்பல் (ரலி)
இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ள இதர நூல்கள் : திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, அஹ்மத்
ஹதீஸ் எண் : 28
நபி (ஸல்) அவர்களிடம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் தோழமை கொண்டது போன்று தோழமை கொண்ட நபித் தோழர் ஒருவரை நான் சந்தித்தேன். எங்களில் ஒருவர் தினந்தோறும் தலைவாரிக் கொள்வதையும் தான் குளிக்குமிடத்தில் சிறுநீர் கழிப்பதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டனர் அறிவிப்பவர் : ஹுமைத் அல் ஹிம்யரி
(குறிப்பு : இந்த ஹதீஸை நஸயீ அவர்களும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்)
????
ஹதீஸ் எண் : 29
ஹதீஸ் எண் : 30
பாடம் :
சுத்தம் செய்யும் போது வலக்கரத்தால் தொடுதல் ஆகாது
ஹதீஸ் எண் : 31
உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும் போது, தனது வலது கையில் தனது மர்ம உறுப்பைத் தொடவேண்டாம். மேலும் அவர் கழிப்பிடத்திற்கு சென்றால் தனது வலது கையால் செய்யவேண்டாம். மேலும் அவர் நீர் அருந்தினால் ஒரே மூச்சில் நீர் அருந்த வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூகதாதா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இதை புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ, அஹ்மத் இப்னு மாஜா ஆகியோர் பதிவாக்கியுள்ளனர்.)
ஹதீஸ் எண் : 32
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது வலது கையை உண்ணுவதற்கும், குடிப்பதற்கும், உடை உடுப்பதற்கும் பயன்படுத்துவார்கள். இது அல்லாத காரியங்களுக்கு தனது இடது கையை பயன்படுத்துவார்கள் என்று ஹஃப்ஸா(ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாகீம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண் : 33
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களது வலது கை அவர்களது தூய்மைக் காகவும் (உலூக்காகவும்) அவர்களது உணவுக்காகவும் ஆயிற்று. அவர்களது இடதுகை(மல, ஜலம் கழித்தால்) சுத்தம் செய்வதற்காகவும் அசுத்தமானவற்றிற் காகவும் ஆயிற்று என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(இரண்டாம் அறிவிப்பாளரான இப்றாஹீம் அவர்கள் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுறவில்லை. எனவே இந்த ஹதீஸ் முன்கதிஃ என்ற வகையைச் சார்ந்ததாகும். இவர் இதே கருத்தை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அஸ்வத் வழியாக அறிவிக்கின்றார். இதை அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து மஸ்ரூக் வழியாக ஆடை என்ற பாடத்தில் அறிவிக்கின்றார்.)
(குறிப்பு : இந்த அமைப்புத் தொடரின் படியே இதை இமாம் புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னு மாஜா ஆகியோர் தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர்.)
ஹதீஸ் எண் : 34
மேலுள்ள கருத்தை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) வழியாக வேறு அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்றனர்.
பாடம் :
மலஜலம் கழிக்கும் போது மறைந்து கொள்ளல்
ஹதீஸ் எண் : 35
நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் : எவர் சுருமா தீட்டுகிறாரோ அவர் ஒற்றைப் படையாக தீட்டுவாராக! எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவர் கற்களை வைத்து சுத்தம் செய்கின்றாரோ அவர் (அக்கற்களை) ஒற்றைப் படையாக்குவாராக! எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் அவ்வாறு செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவரேனும் சாப்பிட்டதும் பற்குத்தினால் (அதை துப்பி விடுவாராக) அவர்களது நாவால் துளாவியதை விழுங்கி விடுவாராக! எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தவராவர். எவர் (அவ்வாறு) செய்யவில்லையோ அதனால் தவறில்லை. எவர் மலம் கழிக்கச் செல்கிறாரோ அவர் மறைப்பை தேடிக் கொள்வாராக! திறந்த வெளியில் மணல் மேட்டை குவித்து அதில் மறைந்திருப்பதை தவிர அவர் வேறு வசதியை வெறவில்லையெனில் அதை பின்னோக்கி கொள்வாராக! ஏனெனில் சைத்தான் ஆதமுடைய மக்களின் பிட்டத்தில் விளையாடுகின்றான். எவர் (அவ்வாறு) செய்தாரோ அவர் நல்லதை செய்தார். எவர் (அவ்வாறு) செய்யவில் லையோ அதனால் தவறில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இதன் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெறும் ஹுஸைன் அல்ஹிம்யரி என்பவர் யாரெனத் தெரியாதவர். இந்த ஹதீஸ் அஹ்மத், இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.) ஆகவே இது நிராகரிக்கப்பட வேண்டியது.
பாடம் :
சுத்தம் செய்வதற்கு தடுக்கப் பட்டவை
ஹதீஸ் எண் : 36
அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்கள் (வாழும்) காலத்தில் எங்களில் ஒருவர் (போருக்கு செல்லும் போது) தான் எதிரிகளிடமிருந்து கைப்பற்றும் செல்வத்தில், உடமையாளருக்குப் பாதி, தமக்குப் பாதி என்ற நிபந்தனையின் அடிப்படையில் தமது சகோதரனுடைய மெலிந்த ஒட்டகத்தை (வாடகைக்கு) எடுத்துச் செல்வார். (அதன் படி போரில் ஒரு அம்பு கிடைத்தால்) எங்களில் ஒருவருக்கு அம்புத் தலையும் இறகுகளும் ஒன்னொருவருக்கு அம்பின் அடிப்பாகமும் கிடைக்கும்.
பிறகு ருவைபிஃ சொன்னார்கள் : எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின் வருமாறு கூறினார்கள் :
ருவைபிஃ! எனக்கு பின் உன் வாழ்நாள் நீடிக்கலாம் ! அப்போது நீ மக்களுக்கு யார் தனது தாடிக்கு முடிச்சுப் போட்டு கொள்கின்றாரோ அல்லது யார் கழுத்தில் கயிறு அணிகின்றாரோ அல்லது மிருகங்களின் விட்டை அல்லது எலும்பைக் கொண்டு சுத்தம் செய்கின்றாரோ நிச்சயமாக அவரிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்கள் விலகி விட்டார்கள் என்று அறிவித்துவிடுக!
மஸ்லமா பின் முகல்லத் மூலம் எகிப்தின் கீழ் பகுதிக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ருபைபிஃ பின் சாமித் (ரலி) அவர்கள் கூம்ஷரீக் எனும் ஊரிலிருந்து அல்கமா என்ற ஊருக்குச் செல்லும் வழியில் அல்லது அல்கமா என்று ஊரிலிருந்து கூம்ஷரீக் எனும் உருக்கு செல்லும் வழியில் இதை அறிவித்தாக ஷைபான் குறிப்பிடுகிறார்.
(நஸயீயிலும் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது.)
ஹதீஸ் எண் : 37
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் அல்யூன் என்ற கோட்டை வாயிலாக காவல் காத்து கொண்டிருக்கும் போது (மேற்கண்ட) இந்த ஹதீஸை (தமக்கு) அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அறிவித்தாக அபூஸாலிம் அல்ஜுஷானி அறிவிக்கின்றார்.
அல்யுன் என்று கோட்டை ஃபிஸ்தாஸ் என்ற ஊரிலுள்ள மலையில் இருக்கின்றது என இமாம் அபூதாவூத் (ரஹ்) குறிப்பிடுகின்றார்கள். ஷைபானில் கித்பானி என்பவர் அபூஹுதைபா என்று அழைக்கப்படும் ஷையான் பின் உமைய்யா ஆவார்.
ஹதீஸ் எண் : 38
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எலும்பு அல்லது விட்டையை கொண்டு சுத்தம் செய்வதை தடை செய்து விட்டார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.
(குறிப்பு : இந்த ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப் பட்டுள்ளது.)
ஹதீஸ் எண் : 39
ஜின் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வருகையுற்று முஹம்மத் (ஸல்) அவர்களே! எலும்பு அல்லது விட்டை அல்லது கரித்துண்டு ஆகிய வற்றினால் சுத்தம் செய்வதை விட்டும் உமது தஆலா அவற்றில் எங்களுக்கு உணவை அமைத்து இருக்கின்றான் என்று கூறினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் தடை செய்து விட்டார்கள். இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கின்றார்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் இடம் பெறுகிறார். இவர் விமர்சனத்திற்குரியவர். எனினும் இந்த கருத்துள்ள ஹதீஸ் முஸ்லிம், அஹ்மத், நஸயீ, ஹாகீம் போன்ற நூல்களிலும் பதிவாகியுள்ளது. அவற்றில் மேற்கண்ட நபர் இடம் பெறவில்லை. எனவே இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஹதீஸாக ஆகிவிடுகின்றது.
பாடம் 21 :
கற்களினால் சுத்தம் செய்தல்
ஹதீஸ் எண் : 40
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் தண்ணீர் கூஜாவுடன் உமர்(ரலி) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். உமரே ! இது என்ன என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதும் தாங்கள் உலூச் செய்வதற்கான தண்ணீர் என்று உமர் (ரலி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் உலூச் செய்யும் படி கட்டளையிடப் படவில்லை. அவ்வாறு நான் செய்தால் அது சுன்னத்தாக (வழிமுறையாக) ஆகிவிடும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
(குறிப்பு : இப்னு மாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)
ஹதீஸ் எண் : 41
ஹதீஸ் எண் : 42
பாடம் 23 :
தண்ணீரால் சுத்தம் செய்தல்
ஹதீஸ் எண் : 43
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்கு சென்றார்கள். அப் போது அவர்களுடன் ஒரு சிறுவர் தண்ணீர் பாத்திரத்துடன் சென்றார். அவர் எங்களில் மிகவும் சிறியவர். அதை அவர் இலந்த மரத்தடியில் வைத்தார். நபி (ஸல்) அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றி விட்டு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
(குறிப்பு : புகாரி, முஸ்லிம் ஆகிய நூல்களில் இந்த ஹதீஸ் பதிவு செய்யப் பட்டுள்ளது.)
ஹதீஸ் எண் 44 :
அங்கே தூய்மையை விரும்பக் கூடிய மக்கள் உள்ளனர் (9 : 108) என்ற இந்த இறைவசனம் குபா (என்ற பள்ளி) வாசிகள் தொடர்பாக இறங்கியது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மலஜலம் கழித்தால்) அவர்கள் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்பவர்களாக இருந்தனர். ஆதலால் இந்த வசனம் அவர்கள் தொடர்பாக இறங்கியது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
(குறிப்பு : இதை இமாம் திர்மிதீ, இப்னுமாஜா ஆகியோர் தமது நூல்களில் பதிவு செய்துள்ளனர். இமாம் திர்மிதீ இந்த ஹதீஸை கரீப் என்ற வகையில் சேர்க்கின்றார்கள். இதன் மூன்றாவது அறிவிப்பாளரான இப்ராஹீம் பின் அபீமைமூனா என்பவர் யார் என அறியப்படாதவர். இப்னுமாஜாவின் அறிவிப்பாளர் தொடரில் மேற்கண்டவர் இடம் பெறாவிடினும் அதில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளராக உத்பா பின் அபீ ஹகீம் என்பவர் பலவீனமானவர். மேலும் இப்னுமாஜாவின் அறிவிப்பாளர் தொடரில் அபூதல்ஹா (ரலி) இவ்வாறு அறிவிப்பதாகக் கூறும் தல்ஹாபின் நாபிவு என்பார் அபூஅய்யூபு (ரலி)யின் காலத்தவர் அல்ல) எனவே இது ஏற்கத்தக்கதல்ல.
பாடம் 24 :
சுத்தம் செய்தபின் கையை தரையில் தேய்த்துக் கழுவுதல்
ஹதீஸ் எண் : 45
நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடம் சென்றால் நான் அவர்களுக்கு சிறு பாத்திரத்தில் அல்லது தோல்பையில் தண்ணீர் கொண்டு செல்வேன். அவர்கள் துப்புரவு செய்து கொள்வார்கள். இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். பின்னர் அவர்கள் தங்கள் கையை தரையில் தேய்ப்பார்கள். பிறகு அவர்களுக்கு (தண்ணீருள்ள) வேறொரு பாத்திரத்தைக் கொண்டு வருவேன். அவர்கள் உலூச் செய்வார்கள் என்று வகீஃ அவர்களுடைய அறிவிப்பில் காணப்படுகிறது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
இமாம் அபூதாவூது அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் :- (வகிஃ அவர்களின் ஹதீஸை விட)அஸ்வத் பின் ஆமிர் அவர்களுடைய ஹதீஸில் கூடுதல் விவரங்கள் இருக்கின்றன.
(குறிப்பு : நஸயீ, இப்னுமாஜா ஆகிய நூல்களிலும் இந்த ஹதீஸ் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஷரீக் என்பவர் நினைவாற்றல் குறைந்தவர் என்பதால் இது பலவீனமான ஹதீஸாகும்.)
பாடம் 25 :
பல் துலக்குதல்
ஹதீஸ் எண் : 46
நான் மூஃமின்களுக்கு கஷ்டம் கொடுத்தவன் ஆவேன் என்றில்லை யானால் நான் அவர்களுக்கு இஷாவை பிற் படுத்தி தொழ வேண்டும் என்றும் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டிருப்பேன் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
குறிப்பு : இந்த கருத்துள்ள ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம், நஸயீ, திர்மிதீ, அஹ்மது, ஹாகிம், இப்னுமாஜா, ஹிப்னு ஹிப்பான், முஅத்தா ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.)
ஹதீஸ் எண் : 47
எனது சமுதாயத்தவர்களுக்கு நான் கஷ்டம் கொடுத்தவன் ஆவேன் என்றில் லாவிடில் ஒவ்வொரு தொழுகையின் போதும் பல் துலக்க வேண்டும் என்று நான் அவர்களுக்கு உத்திரவிட்டிருப்பேன் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்தேன் என்று ஸைது காலித் அல்ஜுஹனீ (ரலி) அறிவிக்கிறார்கள். இதன் காரணமாக எழுத்தாளனுடைய காதில் பேனா இடம் பெறுவது போல் ஸைது பின் காலித் (ரலி) அவர்கள் காதில் பற்குச்சி இடம் வகிக்கும் நிலையில் அவர்களைப் பள்ளியில் அமர்ந்திருக்கக் கண்டேன். அவர்கள் தொழத் தயாராகும் போதெல்லாம் பல் துலக்குவார்கள்.
அறிவிப்பவர் : அபூஸலமா (ரலி)
(குறிப்பு : இதை திர்மிதீ, நஸயீ, அஹ்மத் ஆகியோரும் பதிவு செய்துள்ளனர்.)
ஹதீஸ் எண் : 48
உலூவுடன் இருந்தாலும் இல்லா விட்டாலும் ஒவ்வொரு தொழுகைக்கும் இப்னு உமர் (ரலி) அவர்கள் உலூ செய்த காரணம் என்ன? என்று அவர்களது மகன் அப்துல்லாஹ்விடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள் நபி (ஸல்) அவர்கள் உலூவுடன் இருந்தாலும் உலூவுடன் இல்லாவிட்டாலும் உலூச் செய்யுமாறு ஏவப்பட்டிருந்தார்கள். இது அவர்களுக்கு சிரமமான போது ஒவ்வொரு தொழுகைக்கும் பல்துலக்குமாறு கட்டளை யிடப்பட்டார்கள். இப்னு உமர் (ரலி) அவர்கள் தனக்கு சக்தி இருப்பதாகக் கருதியதால் ஒவ்வொரு தொழுகைக்கும் உலூச் செய்பவர்களாக இருந்தனர் என்று அவர்களது மகனார் விடையளித்தார்கள்.
இந்த தகவலை அப்துல்லாஹ் பின் ஹன்லலா அவர்களிடம் கேட்டு அஸ்மா பின்த்ஸைது என்பவர் தமக்கு கூறியதாகவும் குறிப்பிட்டார்.
அறிவிப்பவர் : முஹம்மது பின் ய்ஹ்யா பின் ஹப்பான் (ரலி)
முஹம்மது பின் இஸ்ஹாக் அவர்களிடமிருந்து இதை இப்ராஹிம் பின் சஃது அவர்கள் அறிவிக்கின்ற போது (அறிவிப்பாளர் பெயரை அப்துல்லாஹ் என்பதற்கு பதிலாக) உபைத்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் என கூறுவதாக இமாம் அபூதாவூத் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
(குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மது பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார். இவருடைய ஹதீஸை ஆதாரமாகக் கொள்வதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.)
பாடம் 26 :
பல் துலக்கும் முறை
ஹதீஸ் எண் : 49
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் எங்களுக்கு வாகன வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டு வந்த போது அவர்கள் தமது நாக்கை (பற்குச்சியால்) துலக்கக் கண்டேன் என்று அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அறிவிப்பதாக முஸத்தத் குறிப்பிடுகிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன் அப்போது அவர்கள் தமது நாவின் ஓரத்தில் பற்குச்சியை வைத்துக் கொண்டு உஹ், உஹ் என்று சப்தமிட்டவாறு பல் துலக்கிக் கொண்டிருக்கக் கண்டேன் அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) கூறுவதாக சுலைமான் குறிப்பிடுகின்றார்.
அறிவிப்பவர் : அபூதாவூது
அபூபுர்தா (ரலி) அவர்கள் தமது தந்தை அபூமூஸா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) மூலம் அறிவிக்கிறார்கள். அது ஒரு நீண்ட ஹதீஸாக இருந்தது. அதை நான் சுருக்கி விட்டேன் என முஸத்தத் கூறுவதாக அபூதாவூது குறிப்பிடுகிறார்கள்.
அறிவிப்பவர் : அபூபுர்தா(ரலி)
பாடம் 27 :
மற்றவர்கள் பற்குச்சியினால் பல் துலக்குதல்
ஹதீஸ் எண் : 50
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கிக் கொண்டிருக்கும் போது அவர்களினருகில் இரண்டு நபர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மற்றொரு வரை விட மூத்தவர். அப்போது பல் துலக்குவதைச் சிறப்பிக்கும் விதத்தில் அவ்விருவரில் மூத்தவருக்கு பற்குச்சியை வழங்கி கண்ணியப்படுத்தும் படி நபி (ஸல்) அவர்களுக்கு வஹி இறை அறிவிப்புச் செய்யப்பட்டது என அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : இப்னு உமர் (ரலி) அவர்கள் மூலம் இதே ஹதீஸின் கருத்தை முஸ்லிம் அவர்கள் பதிவு செய்துள்ளனர். இமாம் புகாரி அவர்கள் அறிவிப்பாளர் தொடர் இல்லாமல் பதிவு செய்துள்ளனர்.
ஹதீஸ் எண் : 51
தமது இல்லத்தில் நுழைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதலில் எதைச் செய்யத் துவங்குவார்கள்? என்று நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவிய போது பல் துவக்குவார்கள் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : மிக்தாம் பின் ஷுரைஹ்
குறிப்பு : முஸ்லிம், அஹ்மது, நஸயீ, இப்னு மாஜா, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இது பதிவு செய்யப் பட்டுள்ளது.
ஹதீஸ் எண் : 52
நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கி விட்டு பற்குச்சியை கழுவதற்காக என்னிடம் கொடுப்பார்கள். நானும் அதைக் கொண்டு பல் துலக்கி விட்டு கழுவி அதை மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்து விடுவேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
ஹதீஸ் எண் : 53
மீசையை கத்தரித்தல், தாடியை வளர விடுதல், பல் துலக்குதல், நாசிக்கு தண்ணீர் செலுத்துதல், நகங்களை வெட்டுதல், விரல் கணுக்குகளை நன்கு கழுவுதல், அக்குள் முடி களைதல், மர்ம ஸ்தான முடி எடுத்தல், மல ஜலம் கழித்தபின் தண்ணீரால் சுத்தம் செய்தல் ஆகிய இந்த பத்து காரியங்களும் இப்றாகீம் நபியின் வழிமுறைகளிலிருந்து அரபியர்களிடம் எஞ்சி நிற்பவையாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் வரும் முஸ்அப் என்பவர் நான் பத்தாவது காரியத்தை மறந்து விட்டேன். அது வாய் கொப்பளிப்பதாகத்தான் இருக்க வேண்டும்.
அறிவிப்பவர் : ஜகரிய்யா பின் அபூஸாயிதா
ஹதீஸ் எண் : 54
மேற்கண்ட ஹதீஸே அம்மார்பின் யாஸிர் (ரலி) வழியாக அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் தாடியை வளர விடுதல் என்பதற்கு பதிலாக கத்னா செய்தல் என்ற வாசகமும், தண்ணீரால் செய்தல் என்பதற்கு பதிலாக தண்ணீர் தெளித்தல் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் போன்று இப்னு அப்பாஸ் மூலமும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் ஐந்து செயல்கள் குறிப்பிட்டு அவையனைத்தும் தலையைச் சார்ந்தவை எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் தாடியை (வளர) விடுதல் என்பதை குறிப்பிட்டால் . தாடி முடியை வகிடு எடுத்து சீவுதல் குறிப்பிடப் பட்டுள்ளது என இமாம் அபூதாவூது கூறுகின்றார்கள்.
மேலும் இமாம் அபூதாவூது (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர். அதாவது தல்க் பின் ஹபீப் முஜிரஹித் ஆகியோரிடமிருந்து பக்ர் பின் அப்துல்லாஹ் அல் முஸ்னீ ஆகியோரிட மிருந்து ஹம்மாத் அறிவிக்கும் ஹதீஸ் போலவே வேறு சிலராலும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதில் தாடியை (வளர) விடுவது பற்றி கூறப்படவில்லை. நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அபூ ஸலமா வாயிலாக அறிவிக்கும் ஹதீஸில் தாடியை விட்டு விடுதல் என்றுள்ளது. இப்றாஹீம் அன்னகயீ என்பாரிடமிருந்து இதே போன்ற ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தாடியை விட்டு விடுதல் கத்னா செய்தல் ஆகியன கூறப்பட்டுள்ளன.
குறிப்பு : இது இப்னுமாஜாவிலும் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஸலமா பின் முஹமது யாரென அறியப்படாதவர் என இப்னுல் கையும் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள். இவர் தனது பாட்டனார் மூலம் அறிவிப்பவை முர்ஸலான ஹதீஸாகும். அதாவது இவர் தனது பாட்டனாரைச் சந்திக்கவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் இவரது ஹதீஸை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது எனக் குறிப்பிடுகிறார்கள்.
பாடம் 30
இரவில் எழுந்ததும் பல் துலக்குதல்
ஹதீஸ் எண் : 55
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (இரவில்) எழுந்தால் தமது வாயை பற்குச்சியால் துலக்குவார்கள் என ஹுதைபா (ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : புகாரி, முஸ்லிம், நஸயீ, அஹ்மது, இப்னு மாஜா ஆகியவற்றிலும் இது இடம் பெற்றுள்ளது.
ஹதீஸ் எண் : 56
நபி (ஸல்) அவர்களுக்கு உலூ செய்யும் போது தண்ணீரும், பற்குச்சியும் (இரவிலேயே தயாராக) வைக்கப் படும். அவர்கள் இரவில் எழுந்ததும் மல ஜலம் கழித்து விட்டு பின்னர் பல் துலக்குவார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் பஹ்ஸ் பின் ஹகீம் பின் முஆவியா என்பவர் விமர்சனத்திற்கு உரியவர் என இமாம் முன்திரி குறிப்பிடுகிறார்கள்.
ஹதீஸ் எண் : 57
நபி (ஸல்) அவர்கள் இரவிலும் பகலிலும் தூங்கி விழித்தார்களெனில் உலூச் செய்யும் முன் பல் துலக்காதிருக்க மாட்டார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
குறிப்பு : இதன் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாவதாக இடம் பெறும் அலீ பின் ஜைது பின் ஜத்ஆன் பலவீனமானவர்.
ஹதீஸ் எண் : 58
நான் நபி (ஸல்) அவர்களிடம் ஓர் இரவு தங்கியிருந்தேன். அவர்கள் தூக்கத் திலிருந்து எழுந்து உலூச் செய்யும் தண்ணீ ரருகில் வந்து பற்குச்சியால் பல் துலக்கி னார்கள். பிறகு, வானங்கள் பூமிகளை படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு நிச்சய மாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன (3 : 90) என்ற வசனங்களை கொண்ட (ஆல இம்ரான்) அத்தியாயத்தை முடிக்கும் அளவுக்கு ஓதினார்கள் அல்லது ஓதி முடித்து விட்டார்கள். பின்பு உலூச் செய்து தமது தொழும் இடத்திற்கு வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பிறகு தமது படுக்கைக்கு வந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு தூங்கினார்கள். பிறகு கண் விழித்து முன்பு போல நடந்து கொண்டார்கள். (இவ்வாறு) ஒவ்வொரு முறையும் பல் துலக்கி இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். பிறகு வித்ரு தொழுதார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸை இப்னு புலைல் அவர்கள் ஹுசைன் அவர்களிடமிருந்து அறிவிக்கும் போது நபி (ஸல்) அவர்கள் பல் துலக்கி உலூச் செய்தார்கள். அப்போது வானங்கள் பூமியின் படைப்பில் என்ற (3 : 190வது) வசனத்தை ஓதத் தொடங்கி அந்த அத்தியாயத்தை முடிக்கும் வரை ஓதினார்கள் என்று அறிவிக்கின்றார்.
குறிப்பு : இந்த கருத்து முஸ்லிம், நஸயீ ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.-
No comments:
Post a Comment