Monday, May 17, 2010

புஹாரி -மருத்துவம் -மருத்துவம் தொடர்பான ஹதீஸ்கள் -4

பாடம் : 46
சோதிடம்85
5758 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைல்' குலத்துப் பெண்கள் இருவரின் (வழக்கு) தொடர்பாகத் தீர்ப்பளித்தார்கள். அவர்கள் இருவரும் சண்டையிட்டுக் கொண் டார்கள். அப்போது அவர்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது ஒரு கல்லை எறிய அது அவளுடைய வயிற்றில்பட்டுவிட்டது. கர்ப்பிணியாயிருந்த அவளுடைய வயிற்றில் இருந்த சிசுவை அவள் கொன்றுவிட்டாள். ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம் மக்கள் இந்த வழக்கைக் கொண்டுவந்தனர். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணின் வயற்றிலிருந்த சிசுக்காக ஓர் ஆண்அடிமையை,அல்லது பெண் அடிமையை உயிரீட்டுத் தொகையாகத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். அப்போது குற்றம் புரிந்த அப்பெண்ணின் காப்பாளர் (கணவர்), உண்ணவோ பருகவோ, மொழியவோ அழவோ முடியாத ஒரு சிசுக் காக நான் எப்படி அபராதம் செலுத்துவது அல்லாஹ்வின் தூதரே! இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்பட வேண்டுமல்லவா?என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இவர் (சாதுர்யமாகவும் அடுக்கு மொழியிலும் பேசுவதில்) குறிகாரர்களின் சகோதரர் களில் ஒருவர் என்று சொன்னார்கள்.
5759 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹுதைல் குலத்து) இரு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியைக் கல்லால் அடித்து அப்பெண்ணின் கருவில் இருந்த சிசுவைக் கொன்றுவிட்டாள். நபி (ஸல்) அவர்கள் இந்த வழக்கில் உயிரீட்டுத் தொகையாக ஓர் ஆண் அடிமையை,அல்லது ஒரு பெண் அடிமையைத் தரவேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
5760 சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே கொல்லப்பட்டுவிட்ட ஒரு சிசுவின் விஷயத் தில் ஓர் ஆண்அடிமையை, அல்லது பெண் அடிûமையை உயிரீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள். எவருக்கு எதிராக இத்தீர்ப்பு அளிக்கப் பட்டதோ அவர் (அந்தப் பெண்ணின் கணவர்), உண்ணவோ பருகவோ மொழியவோ அழவோ முடியாத ஒன்றுக்காக நான் எப்படி அபராதம் செலுத்துவது? இதைப் போன்றவை தள்ளுபடி செய்யப்படவேண்டுமல்லவா? என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் (வார்த்தை ஜாலத்தில்) குறிகாரர்களின் சகோதரர் களில் ஒருவர் என்று சொன்னார்கள்.
5761 அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம், சோதிடனின் தட்சிணை ஆகியவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.86
5762 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர்களைப் பற்றிக் கேட்டார்கள். அ(வர்களின் கருத்)து (பொருட்படுத்தத் தக்க) ஒன்றுமில்லை என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் சிலவேளை களில் எங்களுக்கு ஒன்றை அறிவிக்க, அது உண்மையாகிவிடுகின்றதே (அது எப்படி?)என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த உண்மையான சொல் ஜின்னிடமிருந்து சோதிடன் எடுத்துக் கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் அதைப் போட அதனுடன் அவர்கள் நூறு பொய்களைக் கலந்து விடுவார்கள் என்று பதிலளித்தார்கள்.87
அறிவிப்பாளர் அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த ஹதீஸில்) அந்த உண்மையான சொல்...' எனத் தொடங்கும் இறுதித் தொடரை அறிவிப்பாளர் அப்துர் ரஸ்ஸாக் பின் ஹம்மாம் (ரஹ்) அவர்கள் நபியவர்களின் சொல்லாக (முதலில்) கூறவில்லை. பிறகு, அது நபியவர்களின் சொல்லே என அவர் கூறினார் என்று எனக்குத் தகவல் கிடைத்தது.
பாடம் : 47
சூனியம்88
அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் (-யூதர்கள்-) சுலைமானுடைய ஆட்சியி(ன் காலத்தி)ல் ஷைத்தான்கள் (கற்பனை செய்து) கூறியவற்றையே பின்பற்றி னர். (உண்மையில்) சுலைமான் நிராகரித்தவர் அல்லர்; ஆனால், ஷைத்தான்கள்தாம் நிராகரித்தனர். மக்களுக்குச் சூனியத்தையும், பாபிலோனில் இருந்த ஹாரூத், மாரூத் என்ற இரு வானவர்களுக்கு வழங்கப்பட்டதையும் கற்பித்துவந்தனர். (உண்மையில்) அவ்விருவரும் நாங்கள் ஒரு சோதனையாகவே இருக்கின் றோம். (இதைக் கற்பதன் மூலம்) நீங்கள் நிராகரிப்பவராகிவிடாதீர்கள் என்று கூறும் வரை எவருக்கும் (சூனியத்தைக்) கற்பிக்க வில்லை. இறுதியாக, அவர்கள் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிளவை உண்டு பண்ணக்கூடிய(சூனியத்)தை அவ்விருவரிடமி ருந்து தெரிந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் நாட்டமின்றி இ(ந்தச் சூனியத்)தைக் கொண்டு எவருக்கும் அவர்கள் தீங்கிழைத்துவிட முடியாது. தங்களுக்குப் பலனளிக்காத, தீங்கு தருகின்றவற்றையே அவர்கள் கற்றுக்கொள்கி றார்கள். இ(ந்தச் சூனியத்)தை விலைக்கு வாங்கிக்கொள்பவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் இல்லை என்பதை அவர்கள் உறுதியாக அறிந்தே இருந்தனர். (2:102)
அல்லாஹ் கூறுகின்றான்:
சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான் (20:69).
அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் நன்கு பார்த்துக் கொண்டே (அவருடைய) சூனியத்தின் பக்கம் வருகிறீர் களா? (21:3).
அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்களுடைய கயிறுகளும் அவர்களு டைய தடிகளும் அவர்களின் சூனியத்தால் (பாம்புகளாகி) நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது (20:66).
அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே! கூறுக:) இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும் (நான் பாதுகாப்புக் கோருகிறேன்) (113:4). இவ்வசனத்திலுள்ள ஊதும் பெண்கள்' (நஃப்பாஸாத்) என்பது சூனியக்காரிகளைக் குறிக்கும். (23:89ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) துஸ்ஹரூன்' எனும் சொல்லுக்குக் கண்மூடியவர்களாக' என்று பொருள்.
5763 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு பனூஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப் பட்டார்கள். இறுதியில், அவர்கள் ஒரு நாள்' அல்லது ஓரிரவு' என்னிடம் வந்தார்கள். ஆயினும், அவர்கள் (என் மீது கவனம் செலுத்தாமல்) தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டேயிருந்தார்கள்.
பிறகு (என்னிடம் கூறினார்கள்:) ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? எந்த(ச் சூனியம்) விஷயத்தில் தெளிவைத் தரும்படி இறைவனி டம் நான் கேட்டுக் கொண்டிருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவை அளித்து விட்டான். (கனவில்) என்னிடம் (வானவர்கள்) இரண்டு பேர் வந்தனர். அவ்விருவரில் ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், இந்த மனிதரின் நோய் என்ன?என்று கேட்டார். அத்தோழர், இவருக்குச் சூனியம் வைக்கப்பட்டுள்ளது என்று சொல்ல, முதலாமவர் இவருக்குச் சூனியம் வைத்தவர் யார்? என்று கேட்டார். தோழர், லபீத் பின் அஃஸம் (எனும் யூதன்) என்று பதிலளித்தார். அவர்,எதில் வைத்திருக்கிறான்? என்று கேட்க, சீப்பிலும், சிக்கு முடியிலும், ஆண் பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று பதிலளித்தார். அவர், அது எங்கே இருக்கிறது? என்று கேட்க, மற்றவர், (பனூ ஸுரைக் குலத்தாரின் தோட்டத்திலுள்ள) தர்வான்' எனும் கிணற்றில் என்று பதிலளித்தார். இதைச் சொல்லி முடித்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று (பாளை உறையை வெளியே எடுத்துவிட்டுத் திரும்பி) வந்து,ஆயிஷா! அதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போல் உள்ளது; அதன் பேரீச்ச மரங்களின் தலைகள் ஷைத்தானின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொன்னார்கள்.
நான், அல்லாஹ்வின் தூதரே! அ(ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித் துக் காப்பாற்றிவிட்டான். அதை வெளியே எடுப்பதன் மூலம் மக்களிடையே (சூனியக் கலை பரவக் காரணமாகி) குழப்பத்தைக் கிளப்பிவிடுவதை நான் வெறுத்தேன்(எனவே தான் அதை நான் வெளியே எடுக்கவில்லை) என்று சொன்னார்கள். பிறகு அந்தக் கிணற்றைத் தூர்த்துவிடும்படி அவர்கள் கட்டளையிட அவ்வாறே அது தூர்க்கப் பட்டது.89
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்களின் ஓர் அறிவிப்பில், (சீப்பிலும் சிக்கு முடியிலும் என்பதற்கு பதிலாக) சீப்பிலும் சணல் நாரிலும்' என்று காணப் படுகிறது. தலையை வாரும் போது கழியும் முடிக்கே முஷாதத்' (சிக்கு முடி) எனப்படும். சணலை நூற்கும் போது வெளிவரும் நாருக்கே முஷாகத்' (சணல் நார்) எனப்படும்.
பாடம் : 48
இணைவைப்பும் சூனியமும் பேரழிவை உண்டாக்கும் பெரும்பாவங்களில் அடங்கும்.
5764 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங் களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.90
பாடம் : 49
சூனியத்தை(யும் அதற்குப் பயன்படுத்தப் பட்ட பொருளையும்) அகற்றலாமா?
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரை விட்டுச் சூனிய முடிச்சை அவிழ்க்கலாமா? தன் மனைவியுடன் கூடமுடியாதபடி தடுக்கப் பட்ட ஒரு மனிதரின் மந்திரக் கட்டை விடுவிக்கலாமா?என்று நான் சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள், அதனால் குற்றமில்லை; இப்படிச் செய்பவர்கள் (சூனியத்தை) குணப்படுத்தவே விரும்புகிறார்கள். (மக்களுக்குப்) பயனளிக்கக் கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) தடை விதிக்கப் படவில்லை என்று பதிலளித்தார்கள்.91
5765 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.
-அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறிருந்தால் அது சூனியத்திலேயே கடுமையானதாகும்.-
(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் அல்லாஹ்விடம் தெளிவைத் தரும்படி கேட்டுக் கொண்டி ருந்தேனோ, அந்த விஷயத்தில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட்டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என் தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்து கொண்டனர். என் தலைமாட்டில் இருந்தவர் மற்றொரு வரிடம், இந்த மனிதரின் நிலையென்ன? என்று கேட்டார். மற்றவர் சூனியம் செய்யப்பட்டுள்ளார் என்று சொன்னார். அதற்கு அவர், யார் அவருக்குச் சூனியம் வைத்தார்? என்று கேட்டார். மற்றவர், யூதர்களின் நட்புக் குலமான பனூ ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் என்பவர். இவர் நயவஞ்ச கராக இருந்தார் என்று பதிலளித்தார். அவர், எதில் (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், சீப்பிலும் சிக்கு முடியிலும் என்று பதிலளித்தார். அவர், எங்கே (சூனியம் வைக்கப்பட்டுள்ளது)? என்று கேட்க, மற்றவர், ஆண் பேரீச்சம் பாளையின் உறையில் தர்வான்' குலத்தாரின் கிணற்றிலுள்ள கல் ஒன்றின் அடியில் வைக்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்.
பிறகு நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்குச் சென்று அ(ந்தப் பாளை உறை)தனை வெளியே எடுத்தார்கள். பிறகு (என்னிடம் திரும்பி வந்த) நபி (ஸல்) அவர்கள், இது தான்  எனக்குக் (கனவில்) காட்டப்பட்ட கிணறு. இதன் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) உள்ளது. இதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று உள்ளன என்று சொல்லிவிட்டுப் பிறகு அந்தப் பேரீச்சம் பாளை உறை வெளியே எடுக்கப்பட்டது என்றும் கூறினார்கள்.
நான், தாங்கள் (பாளை உறையை) ஏன் உடைத்துக் காட்டக் கூடாது? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ் எனக்கு (இந்தச் சூனியத்திலிருந்து) நிவாரணம் அளித்துவிட்டான். (சூனியப் பொருளைத் திறந்துகாட்டி) மக்களில் எவரையும் குழப்பத்தில் ஆழ்த்த நான் விரும்ப வில்லை என்று சொல்லிவிட்டார்கள்.92
பாடம் : 50
சூனியம்93
5766 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைச் செய்வது போன்ற பிரமை அவர்களுக்கு ஏற்பட்டது. இறுதியில் ஒரு நாள் அவர்கள் என்னிடம் இருந்த போது அல்லாஹ்விடம் (உதவி கோரிப்) பிரார்த் தித்துக் கொண்டேயிருந்தார்கள். பிறகு என்னிடம், ஆயிஷா (விஷயம்) தெரியுமா? எந்த விஷயத்தில் தெளிவளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் கேட்டுக் கொண்டி ருந்தேனோ அந்த விஷயத்தில் அவன் எனக்குத் தெளிவளித்துவிட்டான் என்று கூறினார்கள்.
நான், என்ன அது, அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கனவில்) என்னிடம் (வானவர்கள்) இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் என்னுடைய தலைமாட்டிலும் இன்னொருவர் என்னுடைய கால்மாட்டிலும் அமர்ந்தனர். பிறகு அவர்களில் ஒருவர் மற்றவரிடம், இந்த மனிதரின் நோய் என்ன?என்று கேட்க, மற்றவர், இவருக்குச் சூனியம் செய்யப்பட் டுள்ளது என்று பதிலளித்தார். முதலாமவர், இவருக்கு யார் சூனியம் வைத்தார்? என்று கேட்க, மற்றவர், பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அஃஸம் எனும் யூதன் என்று பதிலளித்தார். முதலாமவர், எதில் சூனியம் வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், சீப்பிலும் சிக்குமுடியிலும் ஆண்பேரீச்சம் பாளையின் உறையிலும் என்று சொன்னார். முதலாமவர், அது எங்கே வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்க, அடுத்தவர், தூஅர்வான் குலத்தாரின் கிணற்றில் என்று பதிலளித்தார்.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் அந்தக் கிணற்றுக்குச் சென்று அதைக் கூர்ந்து கவனித்தார்கள். சுற்றிலும் பேரீச்ச மரங்கள் இருந்தன. (சூனியப் பொருள் கட்டைக் கிணற்றிலிருந்து வெளியே எடுத்தார்கள்.)
பிறகு ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து, அந்தக் கிணற்றின் தண்ணீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தானின் தலைகளைப் போன்று இருந்தன என்று சொன்னார்கள். நான்,அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கட்டைத் தாங்கள் திறந்(து பார்த்)தீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இல்லை;எனக்கோ அல்லாஹ் ஆரோக்கியமளித்து குணப்படுத்திவிட்டான். அதைத் திறந்து காட்டினால் மக்கள் குழப்பமடைந்துவிடுவார்களோ என அஞ்சினேன் என்று சொன்னார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களின் ஆணையின் பேரில் அக்கிணறு தூர்க்கப்பட்டது.
பாடம் : 51
சில சொற்பொழிவுகளில் ஈர்ப்பு உள்ளது.
5767 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இரண்டு மனிதர்கள் (மதீனாவுக்குக்) கிழக்கிலிருந்து வந்து உரையாற்றினார்கள். அவ்விருவரின் (சொல்லெழில் மிக்க) சொற்பொழிவைக் கேட்டு மக்கள் வியந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சில சொற்பொழிவில் கவர்ச்சி உள்ளது' அல்லது சொற்பொழிவுகளில் சில கவர்ச்சியாகும்' என்று கூறினார்கள்.94
பாடம் : 52
சூனியத்திற்கு அஜ்வா' எனும் (அடர்த்தியான உயர் ரகப்) பேரீச்சம் பழத்தை மருந்தாகப் பயன்படுத்துவது.
5768 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தினந்தோறும் காலையில் சில அஜ்வா' ரகப் பேரீச்சம் பழஙகளை யார் (வெறும் வயிற்றில்) சாப்பிடுகின்றாரோ அவருக்கு எந்த விஷமும் எந்தச் சூனியமும் அன்று இரவு வரை இடரளிக்காது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர் அலீ பின் மதீனீ (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்கள் ஏழு பேரீச்சம் பழங்களை என்று (எண்ணிக்கைக் குறிப்புடன்) அறிவித்துள்ளார்கள்.95
5769 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் காலையில் (வெறும் வயிற்றில்) ஏழு அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறாரோ அவருக்கு அன்று எந்த விஷமோ, எந்தச் சூனியமோ இடரளிக்காது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
பாடம் : 53
ஆந்தை குறித்த (மூட) நம்பிக்கை கூடாது.96
5770 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தொற்று நோய் கிடையாது; ஸஃபரும் கிடையாது; (இறந்து போனவரின் எலும்பு ஆந்தையாக மாறிப் பறப்பதாகக் கருதும்) ஆந்தை பற்றிய நம்பிக்கையும் உண்மையல்ல என்று சொன்னார்கள்.
அப்போது கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியமாக) இருந்த ஒட்டகங்களுக்கிடையே சிரங்கு பிடித்த ஒட்டகம் கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கிவிடுகின்றனவே? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முதல் ஒட்டகத்திற்கு (அதை)த் தொற்றச் செய்தது யார்? என்று (திருப்பிக்) கேட்டார்கள்.97
5771 (மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்) அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், வியாதிபிடித்த ஒட்டகம் வைத்திருப்பவர் ஆரோக்கியமான ஒட்டகம் வைத்திருப்பவரிடம் தன் ஒட்டகத்தைக் கொண்டு செல்லவேண்டாம் என்று கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதை பின்பு நான் செவியுற்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் முந்தைய ஹதீஸை (தாம் அறிவிக்கவில்லை யென்று) மறுத்தார்கள். நாங்கள், தொற்று நோய் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக நீங்கள் அறிவிக்கவில்லையா? என்று கேட்டோம். அவர்கள் (தாம் கூற வில்லையென்று மறுத்துக் கோபத்துடன்) அபிசீனிய மொழியில் ஏதோ பேசினார்கள். இதைத் தவிர (தாம் அறிவித்த) வேறெந்த ஹதீஸையும் அவர்கள் மறந்து நான் பார்த்த தில்லை.
பாடம் : 54
தொற்று நோய் கிடையாது.98
5772 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; சகுனம் பார்ப்பது (இருக்க முடியுமென்றால்) மூன்று விஷயங் களில்தாம். குதிரையிலும் மனைவியிலும் வீட்டிலும்தாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.99
5773 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தொற்று நோய் கிடையாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
5774 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வியாதி பிடித்த ஒட்டகத்தை ஆரோக்கிய மான ஒட்டகத்திடம் கொண்டு செல்லாதீர்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.100
5775 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தொற்று நோய் கிடையாது என்று சொன்னார்கள். உடனே கிராமவாசி ஒருவர் எழுந்து, (பாலை) மணலில் மான்களைப் போன்று ஆரோக்கியமாக இருந்து கொண்டி ருக்கும் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து (கலந்து) அவற்றுக்கும் சிரங்கு பிடிக்கச் செய்துவிடுகின்றதே, இது பற்றி தாங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அப்படி யானால் முதல் ஒட்டகத்திற்குத் தொற்றச் செய்தது யார்? என்று கேட்டார்கள்.101
5776 அனஸ் (ரலி)அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தொற்று நோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று சொன்னார்கள். மக்கள், நற்குறி என்றால் என்ன? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (மங்கலகரமான) நல்ல சொல் என்று பதிலளித்தார்கள்.102
பாடம் : 55
நபி (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்டது பற்றிய குறிப்பு.
இது பற்றி ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் குறித்து அறிவித்துள் ளார்கள்.103
5777 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஹிஜ்ரி-7ஆம் ஆண்டில்) கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப்பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது. (விஷயம் தெரிந்தவுடன்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,இங்குள்ள யூதர்களை ஒன்று திரட்டி என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் ஒன்று திரட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார்கள்.
அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப்போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள் சரி (உண்மையைச் சொல்கிறோம்), அபுல்காசிம் (முஹம்மது -ஸல்) அவர்களே! என்று பதிலளித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் தந்தை யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், எங்கள் தந்தை இன்னார் என்று பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தாம் என்று கூறினார்கள். யூதர்கள், நீங்கள் உண்மை சொன்னீர்கள்; நல்லதையும் சொன்னீர்கள் என்று கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள், நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா? என்று (மறுபடியும்) கேட்டார்கள். அதற்கவர்கள், சரி, அபுல் காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்து கொண்டதைப் போன்றே இதையும் அறிந்துகொள்வீர்கள் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நரகவாசிகள் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், நாங்கள் அந்த நரகத்தில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்கு பதிலாக அதில் நீங்கள் புகுவீர்கள் என்று பதிலளித்தார்கள்.
(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யூதர்களிடம், அதில் நீங்கள் தாம் இழிவடைவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்கு பதிலாக ஒரு போதும் புகமாட்டோம் என்று கூறிவிட்டுப் பிறகு அவர்களிடம், நான் (இன்னும்) ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா? என்று கேட்டார்கள். யூதர்கள், சரி என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா? என்று கேட்டார்கள். அவர்கள், ஆம் (கலந்திருக்கிறோம்) என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நீங்கள் பொய்யராக இருந்(து, விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் ஆனந்தமடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்களிக்காது என்று பதிலளித்தார்கள்.104
பாடம் : 56
விஷம், ஆபத்தான பொருள், அசுத்தமான பொருள் ஆகியவற்றால் சிகிச்சை அளிப்பதும், விஷம் அருந்துவதும்.105
5778 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.106
5779 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் (ஓவ்வொரு நாளும்) காலையில் ஏழு அஜ்வா' (ரகப்) பேரீச்சம் பழங்களை உண்ணுகிறாரோ அவருக்கு அன்று எந்த விஷமோ சூனியமோ இடரளிக்காது.
இதை சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்107
பாடம் : 57
கழுதைப் பால்108
5780 அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.109
( இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்)
அவர்கள், நான் ஷாம் நாட்டிற்கு வரும்வரை இந்த ஹதீஸை செவியுற்றதில்லை என்று சொன்னார்கள்.
5781 மற்றோர் அறிவிப்பில் லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்கள் அதிகப்படியாக அறிவித்திருப்பதாவது:
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
நான் அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், கழுதைப் பாலில் நாங்கள் அங்கசுத்தி (உளூ) செய்யலாமா?அல்லது அதைப் பருகலாமா? அல்லது விலங்குகளின் பித்த நீரை, அல்லது ஒட்டகத்தின் சிறுநீரை அருந்தலாமா? என்று கேட்டேன். அவர்கள், முஸ்லிம்கள் ஒட்டகத்தின் சிறுநீரால் சிகிச்சை பெற்றுவந்தார்கள். அதில் தவறேதும் இருப்பதாக அவர்கள் கருதவில்லை. அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் (நாட்டுக்) கழுதை யின் இறைச்சியை உண்ண வேண்டாமென்று தடை விதித்ததாகச் செய்தி எமக்கு எட்டியுள் ளது. ஆனால், அவற்றின் பாலை அருந்துங்கள் என்றோ அருந்தாதீர்கள் என்றோ எந்தக் கட்டளையும் அல்லது தடை உத்தரவும் நமக்கு எட்டவில்லை என்று சொன்னார்கள்.
விலங்குகளின் பித்த நீரைப் பொறுத்த வரை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ண வேண்டாமெனத் தடை செய்தார்கள் என்று அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாக அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்.
பாடம் : 58
பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்...
5782 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது
.இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

No comments:

Post a Comment